கோல்கத்தா: இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையம் பெயரே இல்லாமல் இயங்கி வருகிறது.
ஆனால், அந்த ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆறு ரயில்கள் வந்துசேர்கின்றன. நூற்றுக்கணக்கான பயணிகள் அந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த ரயில் நிலையம் பர்தாமன் நகரத்தில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப் பலகைகளில் எந்த விவரமும் காணப்படவில்லை. ஊர் பெயரோ, அல்லது விவரங்களோ இல்லாமல் பெயர்ப் பலகைகள் ‘மஞ்சள்’ நிறத்தில் வெறுமையாகக் காட்சியளிக்கின்றன.
கடந்த 18 ஆண்டுகளாகவே இதுதான் நிலைமை. ‘ஏன் இப்படி’ என்ற கேள்விக்குப் பின்னால், சுவாரசியமான தகவல் உள்ளது.
ரெய்னாகர், ராய்நகர் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டதால் இரு கிராமத்தினரும் தங்கள் கிராமத்தின் பெயரே வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
சமரச முயற்சிகள் கைகொடுக்காததால், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டது. வழக்கு நிலுவையில் இருப்பதால், ரயில்வே நிர்வாகம் வேறு வழியின்றி பெயர்ப்பலகையை காலியாக வைத்துள்ளது.
எனினும் நாள்தோறும் ஆறு ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதால் நூற்றுக்கணக்கானோர் இந்த பெயரற்ற ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். சரக்குப் போக்குவரத்தும் தடையின்றி நடந்துவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகை காலியாக இருந்தாலும், பயணச்சீட்டுகள் ‘ராய்நகர்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் பல பயணிகள் குழப்பத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே, நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

