புதுடெல்லி: சூரிய மின்சக்தியில் (Solar) இந்தியா ஒரு வல்லரசு நாடாகத் திகழ்கிறது என்று ஐநா பருவநிலை தலைமை அதிகாரி சைமன் ஸ்டீல் தெரிவித்துள்ளார்.
அந்த சிறப்புக்குரிய இந்தியா தனது ஒட்டுமொத்த பொருளியலையும் உள்ளடக்கும் வலுவான பருவநிலை செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை (பிப்ரவரி 15)தொடங்கிய இ.டி. உலக வர்த்தக உச்சநிலைக் (ET Global Business Summit) கூட்டத்தில் பங்கேற்று திரு ஸ்டீல் பேசினார்.
உலகளாவிய சுத்தமான எரிசக்தியை இந்தியா அதிகம் பெறுவது அதன் பொருளியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.
பருவநிலை மாற்ற அபாயங்களைத் தணிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டிய திரு ஸ்டீல், சில நாடுகள் பேச்சளவில் நின்றுவிட்ட நிலையில் இந்தியா செயலில் இறங்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
“இந்தியா ஏற்கெனவே சூரியசக்தியில் ஒரு வல்லரசாக விளங்குகிறது. தங்களது நாட்டில் 100 கிகாவாட்டுக்கும் அதிகமான சூரியசக்தி ஆற்றலைப் பொருத்தி இருக்கும் உலகின் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
“நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்தும் இலக்கை இந்தியா நிறைவேற்றி வருவதால் எரிசக்தியைப் பெறுவது அங்கு அதிகரித்து வருகிறது.
“இந்தியா தனது பொருளியலுக்கும் 1.4 பில்லியன் மக்களுக்கும் அதிகப் பலனளிக்கும் வகையில் அடுத்தகட்டத்தில் அது அடி எடுத்து வைக்கவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“உலகளாவிய தூய எரிசக்தியை வலுவாகத் தழுவுவதுதான் அந்த அடுத்தகட்டம். அவ்வாறு நிகழும்போது அது இந்தியப் பொருளியல் வளர்ச்சிக்கு உறுதுணையாய் அமையும்.
“உலகின் சில நாடுகளுக்கு மட்டுமே உள்ள வாய்ப்பை இந்தியா பெற்றிருக்கிறது.
“நூற்றுக்கணக்கான ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை பயன்படுத்துவதற்கான திட்டத்தை இந்தியா உருவாக்கி அதனை நிறைவேற்ற வேண்டும்.
“பசுமைத் தொழில்மயமாக்கலின் புதிய வடிவங்களையும் இன்றியமையாத தொழில்நுட்பங்களை உருவாக்கி பிற நாடுகளுக்கு வழங்குவதையும் இந்தியா முன்னின்று செய்ய வேண்டும்,” என்று திரு ஸ்டீல் கூறினார்.