புதுடெல்லி: இந்தி மொழி இந்தியாவின் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
1949 செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அங்கீகரிக்கப்பட்டது.
அதனைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி ‘இந்தி மொழி நாள்’ (ஹிந்தி திவாஸ்) கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாண்டுக்கான இந்தி மொழி நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அமித்ஷா தமது வாழ்த்துச் செய்தியில், “அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்க வேண்டும். நமது நாடு அடிப்படையில் ஒரு மொழி சார்ந்த நாடு,” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “நமது மொழிகள் கலாசாரம், வரலாறு, மரபுகள், அறிவு, அறிவியல், தத்துவம் மற்றும் ஆன்மிகத்தை சார்ந்து உள்ளது. ஒன்றாக நடப்போம், ஒன்றாகச் சிந்திப்போம், ஒன்றாகப் பேசுவோம் என்பது இந்தியாவின் மொழியியல் கலாசார உணர்வின் முக்கிய மந்திரமாக உள்ளது.
“வந்தே மாதரம்’, ‘ஜெய் ஹிந்த்’ போன்ற முழக்கங்கள் நமது மொழியியல் உணர்விலிருந்து தோன்றி, சுதந்திர இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் அடையாளமாக மாறி உள்ளது.
“பிரதமர் பதவியில் நரேந்திர மோடி அமர்ந்த 2014ஆம் ஆண்டு முதல், அரசுப் பணிகளில் இந்தி மொழியின் பயன்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“மோடியின் தலைமையில் இந்திய மொழிகள் மற்றும் கலாசார மறுமலர்ச்சிக்கான பொற்காலம் உருவாகியுள்ளது,” என்று அமித்ஷா கூறியுள்ளார்.