அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

2 mins read
5a399a46-e059-4548-8e72-7c2be4f629fa
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.68ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - படம்: மனி கன்ட்ரோல்

புதுடெல்லி: அனைத்துலகச் சந்தையில் ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணா வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.

ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.68ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு லட்ச ரூபாயைக் கடந்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைய இதுவும் ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணைய் வாங்குவதை அமெரிக்கா கண்டித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழச்சி கண்டுள்ளது. ஒரே நாளில் 41 காசு சரிவு கண்ட இந்திய ரூபாயின் மதிப்பு, டாலருக்கு இணையாக ரூபாய் 90.83ஆக சரிந்து, பின் மீண்டது.

இந்தியாவின் வெளி வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையை பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ரூபாயின் மதிப்பு சரிவடைய இதுவும் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

அனைத்துலகச் சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும் தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும் டாலரின் தேவையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை

இதனிடையே, இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது.

திங்கள்கிழமை (டிசம்பர் 15), ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,650க்கு விற்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அன்றைய தினம் மாலைக்குள் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு மேலும் ரூ.250 அதிகரித்தது.

இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பவுன் தங்கம் ஒரு லட்ச ரூபாயை எட்டியது.

குறிப்புச் சொற்கள்