காந்திநகர்: இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் பேய்மழை, பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் தரைப்படை, கடற்படை, ஆகாயப் படை என முப்படை வீரர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்தோரில் ஏழு பேர் டிராக்டர் மூலம் வெள்ளநீரைக் கடக்க முயன்றபோது மாண்டனர். மோர்பி மாவட்டத்தின் தாவனா கிராமம் அருகே அவர்கள் பயணம் செய்த டிராக்டரை வெள்ள நீர் இழுத்துச் சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியது.
புதன்கிழமை மட்டும் 19 பேர் மழை, வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
மாநிலத்தின் கச், மோர்பி, ஜாம்நகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ள அபாயம் அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 4 நாள்களாகப் பெய்த கனமழை காரணமாக வதோதரா, துவாரகா, ஜாம்நகர், ராஜ்கோட், போர்பந்தர் உள்ளிட்ட 18 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அதனால், இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
போக்குவரத்து மிகுந்த சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
குஜராத்தில் உள்ள 140 நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளிலும் 24 ஆறுகளிலும் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
விஸ்வாமித்ரா ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் வதோதராவின் சில பகுதிகள், கரையோர நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
துவாரகா நகரில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இரு நாள்களாகச் சிக்கித் தவித்த 95 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
ஏற்கெனவே 20,000 பேர் அவரவர் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இன்னும் பலர் வெளியேற்றப்படாமல் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியிலும் நிவாரண பணிகளுக்காகவும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மாநில முதல்வர் பூபேந்திர பட்டேலுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு, நிலைமையைக் கேட்டறிந்ததோடு மத்திய அரசு உதவிக்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை வரை கனமழை தொடரும் என்று மாநில வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது.