நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளைக் கையாளலாம்: நீதிமன்றம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளைக் கையாளலாம்: நீதிமன்றம்

படம்: எர்பன் ஏகர்ஸ்

04 Nov 2026 - 10:45 pm

2 mins read

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 147 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும் தமிழக அரசின் அரசாணை மீதான இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக நகர்ப்புறங்களில் திடக்கழிவுகளைச் சேகரித்து குப்பைக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லும் பணிகள் முன்னதாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்நடவடிக்கையை மாற்றி, உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாகப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டது. இத்திட்டத்திற்காக ரூ.616.28 கோடி மதிப்பீட்டில் 22,000 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வரசாணையை எதிர்த்துத் தனியார் திடக்கழிவு மேலாண்மை நிறுவனங்களின் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறி, அக்டோபர் 30ஆம் தேதி அரசாணைக்குத் தடை விதித்திருந்தார்.

இத்தடையை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படியே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது; இதன் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்குப் பணப்பலன்கள் நேரடியாகச் சென்றடையும்,” என வாதிட்டார்.

வாதங்களைப் பரிசீலித்த நீதிபதிகள், தனிநீதிபதியின் தடை உத்தரவு 147 உள்ளாட்சி அமைப்புகளிலும் தூய்மைப் பணிகளை முடக்கி, பொது சுகாதாரச் சீர்கேட்டையும் தொற்றுநோய் ஆபத்தையும் ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டனர்.

எனவே, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் வழங்கி உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்