புதுடெல்லி: இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் ஆறுநாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
அவர் புதுடெல்லியில் சனிக்கிழமை (அக்டோபர் 11) இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார்.
“இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோரைச் சந்தித்தேன். இந்திய-அமெரிக்க உறவு குறித்தும் உலகளவில் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினோம். அவருடைய புதிய பொறுப்பிற்காக வாழ்த்து தெரிவித்துக்கொண்டேன்,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 9 முதல் 14 வரையிலான ஆறுநாள் பயணத்தில், திரு கோருடன் அமெரிக்க மேலாண்மை, வளங்களுக்கான துணை அமைச்சர் மைக்கல் ஜே ரிகாசும் இந்தியா சென்றுள்ளார்.
உத்திபூர்வ, வணிக உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் பணியாற்றிவரும் வேளையில் அவர்களின் இப்பயணம் இடம்பெறுகிறது.
வணிக உடன்பாட்டை இறுதிசெய்யவும் தொழில்நுட்பம், தற்காப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தேவையான வழிமுறைகளை இருதரப்பும் ஆராய்ந்து வருகின்றன.
தாம் தூதராக நியமிக்கப்பட்டதற்கான சான்றுகளைப் பின்னர் ஒருநாளில் திரு கோர் முறைப்படி வழங்குவார் என்று இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் திரு கோரைச் சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதுகுறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் அமெரிக்கத் தூதர் கோரும் இன்று (சனிக்கிழமை) சந்தித்தனர். இந்தியா-அமெரிக்கா விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் குறித்தும் அதன் தொடர்பிலான இருதரப்பு முன்னுரிமைகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குமுன் நியூயார்க்கில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, திரு கோரை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியிருந்தார்.
அமெரிக்காவிலிருந்து இந்தியா புறப்படுவதற்குமுன் வியாழக்கிழமை திரு கோருக்கு அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் தீபாவளி விருந்தளித்துச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.