தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா - இந்தியா இடையில் $500 பில்லியன் வணிக இலக்கு

2 mins read
3f77e2aa-a863-4731-b4f3-054d3f11d220
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார்.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மேலும் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இருதலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

“இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் இருந்து குறைவான பொருள்களையே இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

“அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய், எரிசக்தி உள்ளிட்டவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். செயற்கை தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.

“அமெரிக்காவின் அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும். இந்திய, சீன எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தியாவில் சிறிய அணு உலைகளை அமைப்பது தொடர்பாக அதிபர் டிரம்ப்புடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினேன்.இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. பாதுகாப்பு துறையில் இருநாடுகளும் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்யும்,” என்று மோடி தெரிவித்தார்.

“விண்வெளித் துறையில் இந்தியா, அமெரிக்கா இடையே நெருங்கிய உறவு நீடிக்கிறது. இ‍ஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள், விரைவில் இந்திய ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது அமெரிக்கப் பயணத்தில் திரு மோடி, அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் வால்ட்ஸ், தொழிலதிபர் இலோன் மஸ்க், விவேக் ராமசாமி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

ஐந்து நாள்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி சனிக்கிழமை நாடு திரும்பினார்.

குறிப்புச் சொற்கள்