நியூயார்க்: அமெரிக்காவுக்குள் இந்திய அரிசி குவிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
அளவுக்கு அதிகமாக அரிசி வருவதால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த அரிசி இறக்குமதிக்குப் புதிதாக வரி விதிப்பது தீர்வாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை (டிசம்பர் 8) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வட்டமேசைக் கூட்டத்தில் திரு டிரம்ப் பேசினார்.
“மலிவான வெளிநாட்டுப் பொருள்கள் அமெரிக்காவில் உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்கச் சந்தையில் இறக்குமதி செய்து கொட்டப்படும் அரிசியால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“கனடாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை உரத்தாலும் இங்குள்ள விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவற்றை எல்லாம் தடுத்து நிறுத்த நாம் நமது வரிவிதிப்பைத் தொடரலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் ஆகப் பெரிய அரிசி ஆலைகளில் ஒன்றான கென்னடி ரைஸ் மில்லின் தலைமை நிர்வாக அதிகாரி மெரில் கென்னடியும் கலந்துகொண்டார்.
திரு டிரம்ப் உரையாற்றிய பின்னர் மெரில் கென்னடி பேசுகையில், “இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளாக உள்ளன. அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் வரிவிதிப்பு சரியான விதத்தில் வேலை செய்கிறது. நாம் அதை இரட்டிப்பாக்க வேண்டும்,” என்றார்.

