நியூயார்க்: ஆக அதிகமான எரிசக்தித் தேவையைக் கொண்டுள்ள இந்தியா அதற்கான வளங்களை உலகெங்கும் திரட்ட முயல்கிறது என்றும் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா விரும்புகிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ‘லிண்ட்சி ஓ. கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் பொருளியல் தடைச் சட்டம் 2026’ என்பதில் கையெழுத்திட்டு அதைச் சட்டமாக்கினார்.
சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள்மீது 100 விழுக்காடு வரை வரி விதிக்க அதிபருக்கு அந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள்மீது 500 விழுக்காடு வரிவிதிக்கும் மசோதாவை முன்மொழிந்த மறைந்த செனட்டர் லிண்ட்சி கிரகாமின் பெயர் அந்தப் புதிய சட்டத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட மசோதா குறித்தும், இருதரப்பு உறவில் இது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் பற்றிய இந்தியாவின் பதில் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அந்த அதிகாரி, அமெரிக்க நாடாளுமன்றம் மிகவும் கடுமையான அணுகுமுறையைக் கையாள்வதாகக் கூறினார்.
அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள இந்தச் சட்டம் அதிபர் டிரம்ப்பிற்கு ஒரு புதிய அதிகாரத்தை வழங்கியுள்ளது என்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“அதற்காக அவர் அந்த அதிகாரத்தை உடனடியாக நாளைக்கே பயன்படுத்துவார் என்று பொருள்படாது. ஆனால், அதற்கான வாய்ப்பு அவரிடம் உள்ளது.
“ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலேயே அவர் கவனம் செலுத்தி வருகிறார். இது அவர் தமது தேர்தல் பிரசாரத்தின்போது முன்வைத்த ஓர் அம்சம் என்பதோடு, ஆரம்பத்திலிருந்தே அவர் அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டும் வருகிறார்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
“இந்த முயற்சியை ஆதரிப்பதில் இந்தியா போன்ற நட்பு நாடுகளின் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேவேளையில், இந்தச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
“இருப்பினும், இதில் தேசியப் பாதுகாப்பு தொடர்பான பரந்த அளவிலான விதிவிலக்கு ஒன்று உள்ளது. எனவே, ஏதேனும் ஒரு சூழலில் அதிபர் அந்த விதிவிலக்கைப் பயன்படுத்தக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
