தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ர‌ஷ்யாவுடன் அமெரிக்கா வர்த்தகம்’: இந்தியாவின் குற்றச்சாட்டுக்குப் பதில் இல்லாத டிரம்ப்

2 mins read
ba897be6-071e-437a-8f59-db0713f465f4
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்கா, ர‌ஷ்யாவுடன் வர்த்தகம் செய்துவருகிறது; அப்படியிருந்தும் தாங்கள் ர‌ஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதை அமெரிக்கா குறைகூறுகிறது என்று இந்தியா குற்றஞ்சாட்டியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், “அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. தகவல் அறிந்த பிறகு உங்களுக்குப் பதிலளிக்கிறேன்,” என்று செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்தார்.

தமது வரிவிதிப்பை நடைமுறைப்படுத்த திரு டிரம்ப் இம்மாதம் ஒன்றாம் தேதிவரை கெடு விதித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று திரு டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், ர‌ஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு தண்டனைகள் விதிக்கப்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிறகு, ர‌ஷ்யாவிடமிருந்து ராணுவச் சாதனங்கள், எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதால் இந்திய இறக்குமதிகள் மீதான வரி உயர்த்தப்படலாம் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார். சீனாவும் இந்தியாவும்தான் ர‌ஷ்யாவிடமிருந்து ஆக அதிக அளவில் எரிசக்தி வாங்குவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் அணுசக்தித் துறைக்காக ர‌ஷ்யாவிலிருந்து தொடர்ந்து யுரேனியம் ஹெக்சஃபுளோரைடையும் (uranium hexafluoride) மின்சார வாகனத் துறைக்காக பெலேடியம் உலோகத்தையும் மற்றும் உரம், ரசாயனங்கள் ஆகியவற்றையும் இறக்குமதி செய்கிறது,” என்று எடுத்துரைத்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

ர‌ஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதன் மூலம் இந்தியா, உக்ரேன் போரில் ர‌ஷ்யா பக்கம் நிற்பதாக திரு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். எனினும், அவரின் குடியரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான நிக்கி ஹேலியும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

“இந்தியா, ர‌ஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாதாம். ஆனால், ர‌ஷ்யா, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் எதிரி நாடான சீனாவுக்கான வரிவிதிப்பு 90 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சீனாவுக்கு இடம் கொடுத்து வலுவான பங்காளியான இந்தியாவுடனான உறவை மோசமாக்கிக்கொள்ளாதீர்,” என்று திருவாட்டி ஹேலி எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார். திருவாட்டி ஹேலி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்.

வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது.

இதற்கிடையே, திரு டிரம்ப்புடனான உறவில் வர்த்தக ரீதியாக ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படக்கூடும் என்று திரு டிரம்ப்பின் மிரட்டல் குறித்து மூத்த ர‌ஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ர‌ஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்