தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ‘ஏஐ’ பயன்பாடு: உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

2 mins read
60102172-fa82-4055-b167-58d5e5df048c
அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நோய் கண்டறிதல், மருந்துகளின் செயல்பாடு, மருத்துவ ஆலோசனைகளில் ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதை உலக சுகாதார நிறுவனம் வரவேற்றுள்ளது.

இது உலக அளவில் சுகாதாரப் புதுமைகளில் ஒரு பெரிய முன்னேற்றம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உலக சுகாதார அமைப்பின் முதல் வழிகாட்டுதல் இதுதான் என்றும், இந்தியாவின் யோசனையின் பேரில் இது உருவாக்கப்பட்டது என்றும் ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.

இதுகுறித்து ஆயுஷ் துறையின் அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறுகையில், “உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முயற்சிகள் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்திய விஞ்ஞானிகள் பாரம்பரிய மருத்துவத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது,” எனப் பாராட்டி உள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, உலக அளவில் பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்றும் மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆயுஷ் துறையில் இந்தியாவின் பல புதிய கண்டுபிடிப்புகளையும் அங்கீகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, சோவா ரிக்பா மற்றும் ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் செயற்கை நுண்ணறிவு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை உலக சுகாதார அமைப்பின் அண்மைய அறிக்கை விரிவாக அலசுகிறது.

பாரம்பரிய முறைகளுடன் செயற்கை நுண்ணறிவை இணைத்து நோய்களைக் கண்டறிவதில் ஏஐ தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

“இது ஆயுர்வேதக் கொள்கைகளை மரபணு அறிவியலுடன் இணைக்கிறது. இதன் மூலம், நோய்களை முன்கூட்டியே கண்டறியவும், ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பட்ட சுகாதார ஆலோசனைகளை வழங்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.

“இந்தியாவின் “பாரம்பரிய அறிவாற்றல், மின்னிலக்க டிஜிட்டல் நூலகம்” (TKDL) போன்ற திட்டங்கள், பழைய மருத்துவ அறிவைப் பாதுகாத்து, அதைச் சரியாகப் பயன்படுத்த உதவுகின்றன. இது உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறியுள்ளார்.

சமூக வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த இந்தியா முயற்சி செய்வதாகப் பிரதமர் மோடி முன்பே தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்