புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி 181 தொகுதிகளைக் கேட்பதாக சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி உறவு மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 181 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது,” எனத் தெரிவித்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது. அக்கூட்டணி 43.52 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
கடந்த 2019ஆம் ஆண்டில் 62 இடங்களை வென்றிருந்த பாஜக, 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் 33 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
இதனால், 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பாஜகவால் பெற முடியவில்லை.
கடந்த 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 17 இடங்களில் ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்று 9.46 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
வரும் 2027ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
