பொது சிவில் சட்டம் முதலில் அமலாகும் மாநிலமாகிறது உத்தராகண்ட்

2 mins read
c7639d3e-9ca2-4424-9369-804907d51d5e
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி.  - படம்: இந்திய ஊடகம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் திங்கட்கிழமை (ஜனவரி 27) முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து சமயத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

கடந்த 2022 உத்தராகண்ட் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப் பேரவையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில் இந்த சட்டம் ஜனவரி 27 முதல் அம்மாநிலத்தில் அமலுக்கு வருகிறது.

முன்னதாக ஜனவரி 26ஆம் தேதி இச்சட்டம் குறித்து உத்தராகண்ட் முதல்வரின் செயலாளர் சைலேஷ் பகோலி கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 28ஆம் தேதி உத்தராகண்ட் வருகிறார். அவரது பயணத்துக்கு ஒருநாள் முன்னதாக மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. பொது சிவில் சட்ட இணையத்தளம் 27ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி இதனை தொடங்கி வைக்கிறார். நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தராகண்ட் பெற உள்ளது,” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்தச் சட்டம் அமலாவது இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தில் திருமணம், சேர்ந்து வாழ்தல் போன்ற உறவு சார்ந்து சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி திருமண வயது இருபாலருக்கும் 21 என ஆக்கப்படுகிறது. இதன்மூலம் முறையாகக் கல்வி பயின்று வேலை பெறுவதற்கு முன்னர் திருமணம் செய்து கொள்வதும் குறையும் என அரசு கூறுகிறது. அதேபோல் அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அம்சம் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் சேர்ந்து வாழ்தல் உறவில் இருப்போர் 21 வயதுக்குக் கீழ் உள்ளவராக இருந்தால் அவர்கள் பெற்றோரின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். சேர்ந்து வாழ்தல் உறவையும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் தெரிவித்தால் 3 மாதம் சிறை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இந்த இரண்டுமே விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி இச்சட்டம் குறித்து கூறுகையில், “பொது சிவில் சட்டத்துக்கு ஒருமித்த ஆதரவு இல்லாத நிலையில், மிக முக்கியமான முன்னோடி திட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தும் விதமாக அதனை உத்தராகண்டில் அமல் படுத்தியுள்ளீர்கள். பொது சிவில் சட்டம் என்பதிலேயே பொது என்ற வார்த்தை இருக்கிறது. அப்படியென்றால் அதை பொதுவாக இந்தியா முழுமைக்கும் தான் அமல்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் அது எப்படி பொது சிவில் சட்டம் ஆகும்,” என்று பாஜகவை விமர்சித்து, பல்வேறு கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்