உத்தராகண்ட் வாக்காளர் பட்டியலில் 8 லட்சம் பெயர்கள் நீக்கம்

உத்தராகண்ட் வாக்காளர் பட்டியலில் 8 லட்சம் பெயர்கள் நீக்கம்

படம்: என்டிடிவி

04 Oct 2026 - 3:51 pm

2 mins read

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் ஏறக்குறைய 8 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சம்பவத்திற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அம்மாநில தலைமைத் தேர்தல் அலுவலகம் சார்பில் கடந்த ஜூன் 8 முதல் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. திருத்தப் பணிக்குமுன் வாக்காளர் பட்டியலில் 79.6 லட்சம் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

தொடர்ந்து, ஜூலை 14 அன்று வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் 71.33 லட்சம் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதன்பின் பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபனைகளைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், அக்டோபர் 3ஆம் தேதியன்று 71.58 லட்சம் வாக்காளர்களுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. சிறப்புத் திருத்தப் பணிக்கு முன்பு இருந்ததை விட தற்போது 8.01 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மனோஜ் ராவத், முன்பு 85.19 லட்சமாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 71.58 லட்சமாகக் குறைக்கப்பட்டிருப்பது ஜனநாயக விரோதச் செயல் எனச் சாடியுள்ளார்.

இதனிடையே, விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் ‘ECI-Net’ செயலி வழியாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாகவோ உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இரு நாள்களுக்கு முன்புதான் கர்நாடகாவில் 45 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க சதி நடப்பதாக அம்மாநில முதல்வர் சிவகுமார், கர்நாடகா தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் உத்தராகண்ட மாநிலத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்