டேராடூன்: வட இந்திய மாநிலமான உத்தராகண்டில் உள்ள மலைப்பகுதியில் அண்மையில் 22 வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஒன்பது பேர் கடும் புயல், பனியைத் தாங்க முடியாமல் உயிரிழந்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் இதர 13 வீரர்களும் உயிரிழந்த வீரர்களின் உடல்களுடன் 36 மணி நேரத்தைக் கழித்துள்ளனர் என்று கர்நாடகா மலையேற்றச் சங்கத்தின் செயலர் ஸ்ரீவாஸ்தா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள், உள்ளூர் வழிகாட்டிகள் என மொத்தம் 22 பேர் அடங்கிய குழுவினர், கடந்த மே மாதம் 29ஆம் தேதியன்று உத்தராகண்ட் மலைப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.
ஜூன் 3ஆம் தேதி அவர்கள் மலை அடிவாரத்தை நோக்கி அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது, பனிப்புயலின் தாக்கத்தால் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, தீவிர தேடுதல் பணியில் இறங்கிய மீட்புக்குழுவினர் உயிர்பிழைத்த 13 வீரர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து, கர்நாடகா மலையேற்றச் சங்கத்தின் செயலர் ஸ்ரீவாஸ்தா கூறுகையில், “மலையேற்ற வீரர்கள் மலை அடிவாரத்தை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தபோது கடும் பனிப் புயல் வீசியது. இதனை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. புயலின் தாக்கத்தால் யார் எங்கே இருக்கிறார்கள் என்பதைக்கூட அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
“இந்நிலையில், உடல் சோர்வு, போதிய உயிர்வாய்வு இல்லாமை ஆகிய காரணங்களால் ஒன்பது வீரர்கள் சுருண்டுவிழுந்து இறந்தனர்.
“மீதமுள்ள வீரர்கள் எங்கும் நகர முடியாமல் தவித்தனர். அவர்கள் தனிப்பெட்டியில் உணவு வைத்திருந்தாலும் கடும் காற்று காரணமாக அவர்களால் அந்த உணவைத் திறந்து கூட சாப்பிட முடியவில்லை. இதனால், அவர்களது உடல்நலனும் பாதிக்கப்பட்டது. அவர்களால் வேறு எதுவும் செய்யமுடியாமல் உயிரிழந்த தங்கள் சக வீரர்களுடன் 36 மணி நேரத்தை அப்படியே கழித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தச் சூழலில்தான், மலை அடிவாரத்திலிருந்து புதிய வழிகாட்டிகளும் மலையேற்ற வீரர்களும் மேலே சென்று புயலில் சிக்கிய 13 வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களைக் காப்பாற்றி உள்ளனர்,” என்று தெரிவித்தார்.
“உயிரிழந்தவர்களில் 71 வயது மலையேற்ற வீராங்கனை ஆஷா சுதாகரும் ஒருவராவார். மலையேற்றத்தில் நல்ல அனுபவம் கொண்டவர். இந்தக் குழுவினருக்குத் தலைமை வகித்த ஆஷா சுதாகரின் கணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
“குழுவில் இருந்த மற்ற அனைவருக்கும் மலையேற்றத்தில் நல்ல அனுபவம் இருந்துள்ளது. இது கடினமான பாதையும் அல்ல. மோசமான வானிலை காரணமாக இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று ஸ்ரீவாஸ்தா மேலும் தெரிவித்தார்.

