உத்தராகண்ட்: 3 ஆண்டுகளில் 23 கோடி சுற்றுப்பயணிகள்

2 mins read
5ec005ef-7fbe-443b-bba8-9b8366a603ef
சுற்றுப்பயணம், புனித யாத்திரை ஆகியவை மாநிலப் பொருளியலுக்கு முதுகெலும்பாக விளங்குவதாகவும் ஆண்டு முழுவதும் இந்த நடவடிக்கைகளைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். - படம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 23 கோடிக்கும் அதிகமான சுற்றுப்பயணிகளையும் புனித யாத்திரை மேற்கொள்வோரையும் வரவேற்றுள்ளது.

வருகையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு நேரடியாகப் பலரின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படுகிறது.

பயணிகள் தங்குவதற்கு வீடுகளை வாடகைக்கு விடுவோர், ஹோட்டல்கள், உணவுக்கடைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், போக்குவரத்து சார்ந்த வர்த்தக நிறுவனங்கள் போன்ற தரப்புகள் நன்மையடைந்தோரில் அடங்கும்.

உத்தராகண்ட் சுற்றுப்பயணத் துறையின் இணை இயக்குநர் யோகேந்திர கங்குவார், தமது துறை மேலும் பன்முகத்தன்மை அடைந்துவருவதாகக் குறிப்பிட்டார்.

வருகையாளர்கள் இப்போதெல்லாம் பெரிய நகரங்கள் அல்லது மலைவாசத் தலங்களோடு மட்டும் நின்றுவிடாமல் உள்ளடங்கிய, சிறிய இடங்களுக்கும் செல்ல விரும்புகின்றனர் என்றார் அவர்.

மேலும், படகோட்டம், மலையேற்றம் போன்ற சாகச நடவடிக்கைகள் சார்ந்த இடங்கள் உள்நாட்டு, அனைத்துலகச் சுற்றுப்பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன. இதனால் சுற்றுப்பயணத் துறையின் நன்மைகள் மில்லியன்கணக்கான உள்ளூர்வாசிகளை நேரடியாகச் சென்றடைகின்றன என்றார் திரு கங்குவார்.

ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்துச் சேவை வழங்குநர்களுக்கு அப்பால், வீடுகளில் தங்குவதற்கு இடமளிக்கும் கிட்டத்தட்ட 6,000 முகவர்கள் தற்போது சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் நேரடியாகப் பயனடைகின்றனர் என்று அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.

இந்த வளர்ச்சி சமயம் சார்ந்த சுற்றுப்பயணத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புனிதப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதை அரசாங்கப் பேச்சாளர் சுட்டினார்.

“இந்த ஆண்டு ‘சார்தாம்’ புனித யாத்திரை மேற்கொள்வோர் எண்ணிக்கை ஏற்கெனவே 50 லட்சத்தைக் கடந்துவிட்டது,” என்று அவர் உறுதிப்படுத்தினார்.

கேதார்நாத், யமுனோத்ரி ஆகியவற்றுக்கு நடந்து செல்லும் பாதைகளில் குதிரை, கோவேறுக் கழுதைகளில் ஏற்றிச் செல்லும் சேவை வழங்கும் கிட்டத்தட்ட 4,300 முகவர்கள் இந்தப் பருவத்தில் மட்டும் சேவை வழங்கியதாகக் கூறப்பட்டது.

ஆண்டு முழுவதும் சுற்றுப்பயண நடவடிக்கைகளை உறுதிசெய்யும் நோக்கில் மாநில அரசாங்கம் குளிர்காலச் சுற்றுப்பயண நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.

சுற்றுப்பயணம், புனித யாத்திரை ஆகியவை மாநிலப் பொருளியலுக்கு முதுகெலும்பாக விளங்குவதாகவும் ஆண்டு முழுவதும் இந்த நடவடிக்கைகளைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை, மாநிலச் சுற்றுப்பயணத் துறைக்கும் உள்ளூர்ச் சமூகங்களுக்கும் நன்மையளித்துள்ளது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்