புதுடெல்லி: இமயமலைத் தொடரில் அமைந்துள்ள முருகக் கடவுளின் கோவிலில் வழிபாடு செய்ய வருமாறு உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களுக்கு உத்தராகண்ட் மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இமயமலைத் தொடரின் கிரவுஞ்ச மலையில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள 12,000 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திக் சுவாமி கோவிலின் தல வரலாறு சுவாரசியம் மிகுந்தது என்கிறார்கள் பக்தர்கள்.
புராணக் கதைகளின்படி, கைலாயத்தில் பிள்ளையார், முருகன் ஆகியோரில் யாருக்கு முதல் வழிபாடு என்ற போட்டி நடந்தது. அப்போது பெற்றோரைச் சுற்றி வந்தாலே உலகைச் சுற்றியதற்குச் சமம் என்று குறிப்பிட்டு, முதல் வழிபாட்டு உரிமையைப் பெற்றார் பிள்ளையார். இதனால் மனம் வருந்திய முருகன், கிரவுஞ்ச மலையில் எழுந்தருளினார் என்பது தல வரலாறு.
இக்கோவிலில் முருகக் கடவுள் வேல், மயிலுடன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
இந்தியாவின் வடக்கு-தெற்கு இடையே உள்ள ஆன்மிகத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இமயமலையில் வீற்றிருக்கும் கார்த்திக் சுவாமிக்கான விழா ஆண்டுதோறும் நடைபெறுவதாகக் கூறுகிறார் உத்தராகண்ட் மாநிலச் சுற்றுலா மேம்பாட்டு வாரிய கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி ரவிசங்கர்.
“ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய தலங்களுக்கு வருவோர், ருத்ர பிரயாக்கில் உள்ள கார்த்திக் சுவாமியை தரிசித்து அருள் பெறலாம். மேலும், பிரமிப்பான இமயமலை தொடர்களையும் ரசிக்க முடியும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

