உலகின் உயரமான ரயில் பாலத்தை 100 கி.மீ வேகத்தில் கடந்து சென்ற வந்தே பாரத்

உலகின் உயரமான ரயில் பாலத்தை 100 கி.மீ வேகத்தில் கடந்து சென்ற வந்தே பாரத்

படம்: இந்து தமிழ் திசை

03 Oct 2026 - 4:37 pm

1 mins read

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் அமைந்து​ள்ள உலகின் மிக உயர​மான செனாப் ரயில்வே பாலத்​தில், வந்தே பாரத் விரைவு ரயிலை மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்​தில் இயக்கி இந்திய ரயில்வே புதிய சாதனை படைத்​துள்​ளது.

ஜம்முவில் உள்ள செனாப் ஆற்​றில் இருந்து ஏறக்குறைய 359 மீட்​டர் (1,178 அடி) உயரத்​தில் அமைந்​துள்​ளது அந்த பிரம்மாண்ட இரும்பு வளைவுப் பாலம். கடுமையான நில அதிர்வு, அதிவேகப் புயல் காற்றைத் தாங்​கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இது வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

வடக்கு ரயில்​வே​யின் ஜம்மு கோட்​டத்​துக்கு உட்​பட்ட ரயில் பிரி​வில் பயண வேகத்தை அதி​கரிப்​ப​தற்​கான சோதனையோட்டம் அண்மையில் நடைபெற்றது.

அந்தச் சோதனையின்போது, வந்தே பாரத் விரைவு ரயில் உலகின் மிக உயர​மான செனாப் பாலத்​தை​யும் இந்​தி​யா​வின் முதலாவது ‘கேபிள்’ ரயில்வே பால​மான அஞ்சி பாலத்​தை​யும் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்​தில் வெற்றிகரமாகக் கடந்தது.

இதுகுறித்து வடக்கு கோட்ட ரயில்வே மூத்த வணிக மேலா​ளர் உச்​சித் சிங் கூறுகையில், “இந்த அதிவேகச் சோதனையோட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதன் மூலம், ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா, பனிஹால் இடையிலான பயண நேரம் கணிசமாகக் குறையும்” என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் தடையின்றி இணைக்கும் இந்த முயற்சி, வட்டாரப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்