ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் மின்உற்பத்தி நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) மாலை வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது.
அந்த வேலையிட விபத்தில் மேலும் ஒருவர் மாண்டார். அதன் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.
பலத்த காயங்கள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆடவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) காலை உயிரிழந்தார். அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
சனிக்கிழமை இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்கள் இருவருக்கும் உடலில் 90 விழுக்காடு தீக்காயங்கள் இருந்தன.
10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
மாண்ட தொழிலாளிகள் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
விபத்து தொடர்பாகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அகர்வால், சுரங்கம், உலோக உற்பத்தி, எண்ணெய், எரிவாயு, இரும்பு, மின்சாரம் எனப் பல துறையில் வர்த்தகம் செய்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல இடங்களில் வேதாந்தா குழுமம் வர்த்தகம் செய்து வருகிறது.
விபத்துக்கான காரணம்
முதல்கட்ட தகவல்படி, மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள வெப்பக் குழாய் ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டதே விபத்துக்கான முக்கிய காரணம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான முழுக்காரணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

