இந்தியாவுக்கு வெனிசுவேலா எண்ணெய்: அமெரிக்கா அறிவிப்பு

இந்தியாவுக்கு வெனிசுவேலா எண்ணெய்: அமெரிக்கா அறிவிப்பு

2 mins read
5fb7ccc6-7f5f-4706-af60-0373b9236a49
வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர் டெல்ஸி ரோட்ரிகெஸ் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்முறை தொலைபேசிவழி பேசியுள்ளார். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: வெனிசுவேலா கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு விநியோகிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) கூறியது.

உக்ரேனை எதிர்த்துப் போரிட்டு வரும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதால் அதற்கு அபராதமாக 25 விழுக்காடு இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.

அந்தக் கூடுதல் வரி கடந்த ஆகஸ்ட் மாதம் நடப்புக்கு வந்தது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் கூடுதல் வரி நீக்கப்படும் என்று திரு டிரம்ப் கூறி வருகிறார்.

இதற்கிடையே, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த 50 விழுக்காட்டு வரியைக் குறைப்பது தொடர்பாக அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்றால் வரி குறையும் என்ற நம்பிக்கையில் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெய்யின் அளவை இந்தியா கணிசமாகக் குறைத்துள்ளது.

ஜனவரி மாதம் 1.2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட நிலையில், பிப்ரவரியில் அதனை 1 மில்லியன் பீப்பாயாகக் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இன்னும் அதிகமான ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்த வேண்டும் என்றும் விரைவில் அந்தக் கொள்முதலை கைவிட வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், அண்மையில் தன்வசம் கொண்டு வந்துள்ள வெனிசுவேலா நாட்டிலிருந்து தருவிக்கப்படும் எண்ணெய்யை இந்தியாவுக்கு விநியோகிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என அதுபற்றி நன்கு அறிந்தவர்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

வெனிசுவேலா தற்காலிக அதிபர் - மோடி பேச்சு

நிலைமை இவ்வாறிருக்க, வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர் டெல்ஸி ரோட்ரிகெசுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழி பேசியுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) மாலை அந்த உரையாடல் நிகழ்ந்தது.

வரும் ஆண்டுகளில் இரு நாடுகளின் உறவை இன்னும் அதிகமாக வளர்க்க அப்போது இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.

ஜனவரி முதல் வாரம் வெனிசுவேலா அதிபர் நிக்கலாஸ் மதுரோவைக் கைது செய்து அந்நாட்டை அமெரிக்கா கைப்பற்றிய பின்னர் வெனிசுவேலா தற்காலிக அதிபர் இந்தியப் பிரதமருடன் முதல்முறையாகப் பேசியுள்ளார்.

அந்தப் பேச்சின் விவரத்தை திரு மோடி தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்