முன்னணி நடிகைபோல் ஆள்மாறாட்டம் செய்து வேலை மோசடி

1 mins read
070f62d3-74ee-48fa-aac5-808c57d24f6c
தன் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வருவது குறித்து நடிகை வித்யா பாலன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். - படம்: ஊடகம்

மும்பை: தன் பெயரில் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, மோசடி செய்வதாக இந்தித் திரையுலக முன்னணி நடிகை வித்யா பாலன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் போலிக் கணக்குகள், மோசடி நடவடிக்கைகளுக்கும் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து ஏமாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுவதாக வித்யா தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ்அப் வழியாக வேலை வாய்ப்புகள் அளிப்பதாகக் கூறி, அவரது பெயரில் தமக்குக் குறுஞ்செய்திகள் வந்ததாக, தெரிந்தவர் ஒருவர் வித்யாவிடம் கூறியதை அடுத்து, இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

வித்யா பெயரில் உருவாக்கப்பட்ட போலி இன்ஸ்டகிராம் பக்கம் குறித்தும் போலி மின்னஞ்சல் கணக்கு குறித்தும் இவ்வாண்டு ஜனவரி 17 - 19ஆம் தேதிகளுக்குள் வித்யாவிற்குத் தெரிந்தவர்கள் பலரும் அவரிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, ஜனவரி 20ஆம் தேதி தன் மேலாளர் மூலமாக மும்பை காவல்துறையிடம் வித்யா புகாரளித்தார்.

இணையவழி ஆள்மாறாட்டம் குறித்தும் இணையத்தில் ஒருவரின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இவ்வழக்கு வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

இதனிடையே, நடிகை இலியானாவுடன் வித்யா சேர்ந்து நடித்துள்ள ‘தோ அவுர் தோ பியார்’ திரைப்படம் வரும் மார்ச் 29ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்