மாமல்லபுரம்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 27) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அவர் சந்தித்தார்.
அப்போது, மருத்துவச் செலவு, கல்விச் செலவு உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாக விஜய் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு நடிகரும் தவெக கட்சித் தலைவருமான விஜய் முக்கிய நகரங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.
கரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால், விஜய் முயற்சி செய்ததாகவும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் தரப்பில் கூறப்பட்டது.
இந்தச் சூழலில், இறந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்து, அவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவெடுத்து அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைத் திங்கட்கிழமை மாமல்லபுரம் ஹோட்டலில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். அப்போது, உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் மருத்துவச் செலவு, கல்விச் செலவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக விஜய் உறுயளித்தார்.

