மும்பை: பிரிட்டனில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள சில சட்ட ரீதியிலான கட்டுப்பாடுகள் காரணமாக, தம்மால் உடனடியாக இந்தியா திரும்ப இயலவில்லை என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தார் என்பது விஜய் மல்லையா எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டு.
மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, 2016ல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, தப்பியோடிய பொருளியல் குற்றவாளியாக 2019ல் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து தன் மீதான வழக்கை எதிர்த்து வழக்கு தொடுத்த அவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் இரு வெவ்வேறு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
எனினும், விஜய் மல்லையா நாடு திரும்பினால் மட்டுமே அவரது மனுக்களை விசாரிக்க முடியும் என நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு விஜய் மல்லையா சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பிரிட்டனில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனை விட்டு வெளியேறக்கூடாது, வெளிநாடு செல்ல எந்தவித முயற்சியும் எடுக்கக் கூடாது, அனைத்துலகப் பயணங்களுக்கான ஆவணங்கள் வைத்திருக்கவோ அல்லது அவற்றுக்காக விண்ணப்பிக்கவோ கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், இந்தியா திரும்புவதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க முடியவில்லை என விஜய் மல்லையா தனது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

