இந்தியா திரும்புவதைத் திட்டமிட்டே தவிர்க்கவில்லை: விஜய் மல்லையா

இந்தியா திரும்புவதைத் திட்டமிட்டே தவிர்க்கவில்லை: விஜய் மல்லையா

1 mins read
9642ab79-475f-48b9-98d0-070bd9189b4c
 விஜய் மல்லையா. - கோப்புப் படம்: எக்கானமிக் டைம்ஸ்

புதுடெல்லி: இந்தியாவால் தேடப்பட்டு வரும் பொருளியல் குற்றவாளியான தொழிலதிபர் விஜய் மல்லையா, தாம் இந்தியாவுக்குத் திரும்புவதைத் திட்டமிட்டுத் தவிர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வங்கிக்கடன் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுப் பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ள அவர், ‘நாட்டை விட்டு ஓடியவர்’ என்ற முத்திரையைத் தம்மால் ஏற்க இயலாது என தமது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய வங்கிகளில் ஏறக்குறைய ரூ.9,000 கோடிக்கும் அதிகமான தொகையைக் கடன் வாங்கித் திரும்பச் செலுத்தாத வழக்கு காரணமாக, 2016ல் லண்டனுக்குச் சென்ற விஜய் மல்லையா, 2019ல் ‘தப்பியோடிய பொருளியல் குற்றவாளி’யாக அறிவிக்கப்பட்டார்.

தாம் 1992 முதல் பிரிட்டனில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும் இங்கிலாந்து நீதிமன்ற உத்தரவின் காரணமாகப் பிரிட்டனை விட்டு வெளியேறத் தனக்குச் சட்டப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசு தமக்கு பெரும் அநீதியை இழைத்துள்ளதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்.

“எனக்குச் சொந்தமான ரூ.14,131.60 கோடி மதிப்பிலான சொத்துகள் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“கடன் தொகையைவிட அதிக தொகை வசூலிக்கப்பட்ட பின்னரும்கூட, என்னை ஊடகங்களும் இதர அமைப்புகளும் ‘மோசடிக்காரன்’ என்று இன்னும் குறிப்பிடுவது நியாயமற்றது.

“எனக்கான நிலுவைத் தொகையை எப்போது திரும்பத் தருவீர்கள்?” என்று விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்