சென்னை: முதல்வராகப் பதவியேற்ற பின்னர், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்துப் பேசினார் ஜோசப் விஜய். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திரு ஸ்டாலின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
இந்தச் சந்திப்பின்போது இருவரும் ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்து மரியாதையை வெளிப்படுத்தினர். முதல்வர் விஜய்க்கு மீண்டும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் ஸ்டாலின்.
அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தோல்வி கண்டார். இதையடுத்து, அவரது மகனும் முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (மே 11) ஸ்டாலின், விஜய் சந்திப்பின்போது உடனிருந்த உதயநிதியும் புதிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முன்பு உதயநிதி தயாரித்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். நல்ல நண்பர்களாக இருந்த இருவரும், தற்போது அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றதைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இதனிடையே, திங்கட்கிழமையன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரையும் மரியாதை நிமித்தம் சந்திப்பார் என்று தெரிகிறது.
இதன் பின்னர் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் இந்திய அளவில் செயல்பட்டு வரும் முக்கியமான கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரமுகர்களையும் விஜய் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

