தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உ.பி.: பள்ளிவாசலில் ஆய்வுசெய்வதைக் கண்டித்து போராட்டத்தில் வன்முறை

2 mins read
2a6f6075-1643-4a49-9d43-552bc991a93c
உத்தரப்பிரதேசம் சம்பல் பகுதியில் ஷாஷி பள்ளிவாசலில் காவல்துறை ஆய்வுமேற்கொள்ளச் சென்றதால் வன்முறை வெடித்துள்ளது. - படம்: ஊடகம்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் ஷாஷி ஜமா பள்ளிவாசல் உள்ளது. இது மொகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இது அங்கிருந்த கோயில் பள்ளிவாசலாக மாற்றப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளிவாசலை ஆய்வு செய்யக் குழு அமைத்து உத்தரவு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், ஆய்வுகுழுவினர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பள்ளிவாசலில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றிருந்தனர். அப்போது ஏராளமானோர் அங்கு கூடி அந்த ஆய்வுக்குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவாறு முழக்கமிட்டனர்.

அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்கள், எதிர்ப்பாளர்களை கலைந்துசெல்லுமாறு கேட்டுக் கொண்டும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்கியோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர்.

இதனையடுத்து காவலர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளிவாசலை ஆய்வுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின்னர், கடந்த சில நாள்களாகவே அப்பகுதி பதற்றமாகக் காணப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய காவலர்களும் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று வன்முறை வெடித்துள்ளது.

கடந்த 19ஆம் தேதியும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பள்ளிவாசலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பள்ளிவாசல் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியில் உள்ள கேலா தேவி கோயில் நிர்வாகத்தினர், ஷாஹி ஜமா பள்ளிவாசல், முன்னர் ஸ்ரீ ஹரிகர் கோயிலாக இருந்தது என்றும் பின்னர் அது 1529ஆம் ஆண்டு பள்ளிவாசலாக மாற்றப்பட்டது என்றும் கடந்த 19ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அதையடுத்து அந்தப் பள்ளிவாசலில் ஆய்வுமேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்