புதுடெல்லி: உலகின் மற்ற பகுதிகளைவிட ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இந்தியர்கள் ஆர்வம் காட்டுவது அண்மையத் தரவுகளின்வழித் தெரியவந்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொள்ள ‘ஷெங்கன் விசா’ வழங்கக் கோரி, ஏறக்குறைய 1.15 மில்லியன் இந்தியக் குடிமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுநாள் வரை பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள்தான் பெரும்பாலானோரின் முதன்மைத் தேர்வாக இருந்துவந்தன. தற்போது சுவிட்சர்லாந்து இந்த இடத்தைப் பிடித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பாவில் உள்ள மற்ற எந்த நாட்டையும்விட சுவிட்சர்லாந்து செல்ல விசா விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும், இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களில் கிட்டத்தட்ட பத்தில் ஆறு விசாக்கள் பலமுறை நுழைவதற்கான அனுமதிகளாக இருந்தன என்றும், இது பயணிகள் ஒவ்வொரு முறையும் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்காமல் ஐரோப்பாவிற்கு மீண்டும் மீண்டும் பயணம் செய்ய அனுமதிக்கிறது என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,153,748 ஷெங்கன் விசா விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அவற்றைப் பரிசீலித்து 967,000 விசாக்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் 181,111 விண்ணப்பங்களுக்கு விசா வழங்கப்படவில்லை. ஏறக்குறைய 15.8% விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஐரோப்பியப் பயணத்துக்கான ஆர்வத்தை வெளிப்படுத்துவதில் சீனா, துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
‘ஷெங்கன் விசா’ என்பது ஐரோப்பிய ஆணையத்தின் பல உறுப்பு நாடுகள் ஒன்றுசேர்ந்து வழங்கும் விசா அனுமதியாகும். ஏதேனும் ஒரு நாட்டில் பெறக்கூடிய ‘ஷெங்கன் விசா’வைக் கொண்டு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளலாம்.
ஐரோப்பியச் சுற்றுலா, வணிகப் பயணம், உயர்கல்வி, எல்லை தாண்டிய இடப்பெயர்வு ஆகியவற்றிற்கு இந்தியாவில் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தைத் தரவுகள் வெளிக்காட்டுவதாகத் துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு இந்தியத் தலைநகரில் உள்ள சுவிஸ் தூதரகம் 226,044 விண்ணப்பங்களைப் பரிசீலித்துள்ளது.
இதேபோல், மும்பையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் 130,562 விண்ணப்பங்களும் சென்னையில் உள்ள ஃபிரான்ஸ் தூதரகத்தில் 28,700 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டன.
அதே வேளையில், விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் விகிதமும் அதிகரித்துள்ளது. கிரீஸ் நாட்டுக்குச் செல்ல விண்ணப்பிக்கும் மூன்று இந்தியரில் ஒருவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது தெரியவந்துள்ளது.


