தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் மட்டும் வாக்குத் திருட்டு: ராகுல் காந்தி

2 mins read
12536503-d263-4522-ad0d-047c6df8d1be
ராகுல் காந்தி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: வாக்குத் திருட்டு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அவற்றைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு பெயரை நீக்குவது தொடர்பாக ராகுல்காந்தி தெரிவித்துள்ள நடைமுறை தவறானது என்றும் அந்த ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

வாக்குத் திருட்டு தொடர்பாக செப்டம்பர் 18ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6,018 வாக்காளர்களை நீக்க பாஜக தரப்பு முயன்றதாகச் சாடினார்.

“2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 விட மிக அதிகம். ஆனால் அந்த 6,018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

“பின்னர், ஆள்மாறாட்டம் செய்து 6,018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை யாரும் ஒருபோதும் நேரடியாகத் தாக்கல் செய்யவில்லை. கணினிச் செயலியைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டன.

நவீன கணினிகள், செயலிகள் கொண்டு வாக்குத் திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.

“வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் நடைபெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? எனக் கண்டறிந்து அந்த சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,” என்றார் ராகுல் காந்தி.

எந்தக் கணினியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டன என்ற இணைய முகவரி (ஐபி) கேட்டதாகக் குறிப்பிட்ட அவர், அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றும் ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றினார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, கர்நாடகா சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கேட்ட எந்தத் தகவலையும் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்றார்.

“செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் கர்நாடக புலனாய்வுக் குழு 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. இது நடந்து கொண்டிருக்கும்போது, கர்நாடகத் தலைமைத் தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, இந்தத் தகவலை வழங்குமாறு கேட்கிறது.

“இப்போது ஞானேஸ்வர் வாக்குத் திருட்டில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கிறார் என்பதற்கு இது முழுமையான உறுதியான சான்று,” என்றார் ராகுல்.

இந்நிலையில், ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

“எந்தவொரு வாக்காளரையும், பொதுமக்களில் எவரும் இணையம் வழி நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் கருத்தைக் கேட்காமல் எந்த வாக்காளர் நீக்கமும் நடக்காது,” என்று தேர்தல் ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்