புதுடெல்லி: அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறினால், அவர்களது எஃப்-1 அல்லது ஜே-1 விசா மீட்டுக்கொள்ளப்படலாம் என்பதும் அவர்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் என்பதுமே அந்த எச்சரிக்கை.
அமெரிக்கச் சட்டத்தை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்படலாம் என்று கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
“அமெரிக்கச் சட்டங்கள் உங்கள் மாணவர் விசாவிற்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் கைதுசெய்யப்பட்டாலோ சட்ட விதிகளை மீறினாலோ, உங்கள் விசா ரத்து செய்யப்பட்டு, நீங்கள் நாடுகடத்தப்படலாம். மேலும், எதிர்காலத்தில் நீங்கள் அமெரிக்க விசா பெறுவதற்கான தகுதியையும் இழக்க நேரிடலாம்,” என்று எக்ஸ் ஊடகம் வழியாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
“விதிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் பயணத்தைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அமெரிக்க விசா என்பது தனிச்சலுகை. அது உரிமை கிடையாது,” என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2024 கல்வியாண்டில் 337,630 இந்திய மாணவர்கள் பயின்று வந்ததாக மதிப்பிடப்பட்டது.
விசா காலம் முடிவடைந்த பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்போர் நாடுகடத்தப்படலாம் என்றும் அவர்கள் மீண்டும் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படும் என்றும் சில நாள்களுக்குமுன் அமெரிக்கத் தூதரகம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அமெரிக்க விசா கேட்டு விண்ணப்பம் செய்த 18 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள், தம் நாட்டிலுள்ள அமெரிக்க விசா மையங்களில் தங்கள் கடப்பிதழைப் பெற்றுக்கொள்ள இன்னொருவரை அனுப்ப முடியாது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து இவ்விதிமுறை நடப்பிற்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
கடப்பிதழை நேரில் அல்லது விநியோகம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். சிறாரைப் பொறுத்தமட்டில், அவர்களின் பெற்றோரில் ஒருவரோ அல்லது காப்பாளரோ பெற்றுக்கொள்ளலாம். ஆயினும், அதற்குப் பெற்றோர் இருவரும் கையொப்பமிட்ட கடிதத்தை வழங்க வேண்டும்.