புதுடெல்லி: பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இன்று முழுவீச்சில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
போர் நிகழும் வேளையில், இந்திய எல்லைப் பகுதிகளில் ஏதேனும் அந்நிய நாட்டு போர் விமானங்கள் நுழைந்தால் அபாய ஒலி எழுப்பப்படும் என்பதால் இன்று நடைபெற உள்ள ஒத்திகையின்போது அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அபாய ஒலியைக் கேட்டதும் பொதுமக்கள் எவ்வாறு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், போர்க்கால ஒத்திகையின்போது நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் அகல் விளக்கு ஒளியில் அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
இந்தப் பணியில் ராணுவத்தினர் மட்டுமல்லாமல், தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் மாணவ, மாணவியர்க்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்குவர்.
அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் வசிப்போர் போர்க்காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எதிரிகள் திடீர்த் தாக்குதல்களை நடத்தும்போது அங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது, பதுங்குக்குழிகள், சுரங்கப்பாதைகளுக்குள் சென்று பாதுகாப்பாகத் தங்குவது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்திய எல்லைப் பகுதியில் ஏற்கெனவே தேவையான எண்ணிக்கையில் ஏராளமான பதுங்குக்குழிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் பல வாரங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லையோரப் பகுதிகளிலும் போர்க்கால ஒத்திகை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் திங்கட்கிழமை (மே 5) அவசரமாகக் கூடியது.
இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பும் பட்சத்தில், சமரச முயற்சியில் ஈடுபடத் தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் பொறுமை காக்க வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

