புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அரசாங்க அலுவலகங்களில் தேங்கிக் கிடந்த கழிவுப்பொருள்களை விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசுக்கு ஒரே மாதத்தில் 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
அலுவலகங்களில் குவிந்துள்ள, பயன்பாட்டில் இல்லாத பழைய பொருள்கள், பழுதான வாகனங்கள் மற்றும் கழிவுகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டப்படுகிறது.
அலுவலகக் கழிவுகளை அகற்றுவதற்காகவே கடந்த 2021ஆம் ஆண்டு ‘தூய்மை மிஷன் 2.0’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அரசின் அலுவலகக் கழிவுகளை சேகரித்து அகற்றவும் மறுசுழற்சி செய்யவும் விற்பனை செய்யவும் இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அலுவலகங்களில் இடப் பற்றாக்குறை இருப்பதால் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அவை. அந்தத் திட்டங்களின்கீழ், அரசு அலுவலகங்களில் தேங்கிக் கிடந்த பயனில்லாத பொருள்களை விற்பனை செய்ததன் மூலம் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
2021ஆம் ஆண்டு இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை ரூ.4,100 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகத் தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.
‘துாய்மை மிஷன் 2.0’ திட்டத்தின் கீழ் தேவையில்லாத கழிவுப்பொருள்கள் அகற்றப்பட்டதன் மூலம் அரசு அலுவலகங்களில் 928.84 லட்சம் சதுர அடி இடம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

