புதுடெல்லி: இரு தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து, யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
யமுனை நதியின் நீர்மட்டம் 206 மீட்டரை எட்டிவிட்டால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) மதியம், யமுனை நதி நீர்மட்டம் அபாய அளவை எட்டியது என்றும் எந்த நேரத்திலும் அபாய அளவைத் தாண்டிவிடும் என்றும் நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.
ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 36,064 கனஅடி, வஜிராபாத் தடுப்பணையில் இருந்து 57,460 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த இரு அணைகளிலிருந்தும் உபரி நீர் திறக்கப்படுவதே யமுனையில் நீர்மட்டம் அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.
யமுனை நதிக் கரையோரம், ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அம்மாவட்ட ஆணையர் விக்ரம் சிங் எச்சரித்துள்ளார்.
அக்கிராமங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதாகவும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுமக்களை மீட்க படகுகள், கயிறுகள் உள்ளிட்ட அனைத்தும் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மும்பை நிலவரம்
இதனிடையே, மும்பை மாநகரில் கனமழை நீடித்து வருகிறது. அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் நிலைகுத்தி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மும்பை சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறிவிட்டதாகவும் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும் சமூக ஊடகத்தில் பலர் கவலையுடன் பதிவிட்டுள்ளனர்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) நள்ளிரவு தொடங்கி, ஏறக்குறைய 8 மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை காரணமாக, மும்பை மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.