புதுடெல்லி: இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளின் நீர் இருப்பு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக அந்நாட்டின் நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை நிறைவடையும் தருவாயில் ‘எல் நினோ’ தாக்கத்தால், வழக்கத்தைவிட மழை அளவு பெருமளவில் குறைந்துள்ளதே நீர் இருப்பு குறைய முதன்மைக் காரணம் என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள 178 அணைகளில் உள்ள நீர் இருப்பு அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 70 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளின் சராசரி நீர் இருப்பைவிடக் குறைவான அளவாகும்.
நடப்பாண்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், நாடு முழுவதும் வழக்கத்தைவிட 12 விழுக்காடு குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நீடித்த வறண்ட வானிலையால் பல மாநிலங்களில் கடும் வறட்சி சூழல் உருவாகியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள 92 அணைகளின் நிலைமை மேலும் வருத்தப்படும் நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 87.25 விழுக்காடாக இருந்த தென்னிந்திய அணைகளின் நீர் இருப்பு, தற்போது 50 விழுக்காடாகச் சரிந்துள்ளது. தென்னிந்தியாவில் பருவமழை வழக்கத்தைவிட 23 விழுக்காடு குறைவாகப் பெய்துள்ளது.
அதேபோல், வடமாநில அணைகளில் நீர் இருப்பு 62 விழுக்காடாகவும் கிழக்கு மாநிலங்களில் 73 விழுக்காடாகவும் சரிந்துள்ளது.
அணைகளில் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்து வருவதால், எதிர்வரும் மாதங்களில் குடிநீர் விநியோகம், விவசாயப் பாசனம், நீர்மின் உற்பத்தி ஆகியவற்றில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
நீர் மேலாண்மையைத் தீவிரப்படுத்தவும் நீர் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
வேளாண் அமைச்சு எச்சரிக்கை
‘எல் நினோ’ வானிலை தாக்கம் காரணமாக வரவிருக்கும் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் என்று இந்திய வேளாண்மைத்துறை எச்சரித்துள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய வேளாண்மைத்துறை செயலாளர் ஆதிஷ் சந்திரா, மழையை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வரவிருக்கும் காலம் பெரும் சவாலாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
கடந்த குறுவை சாகுபடிப் பருவத்தில் பல மாநிலங்கள் பயிர் பரவலை எட்டுவதிலும் பயிர்களைக் காப்பாற்றுவதிலும் கடும் போராட்டங்களைச் சந்தித்ததாகவும் அடுத்து அக்டோபர் மாதத்தில் தொடங்கும் கோதுமை, கடுகு உள்ளிட்ட சம்பா பயிர்களின் விதைப்புப் பருவத்திலும் சில பகுதிகள் அதிகப்படியான மண் ஈரப்பதத்தையும், பிற பகுதிகள் வறட்சியையும் சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
