டாக்கா: பங்ளாதேஷ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப விவாதங்கள் வாயிலாக புதிய கங்கை ஒப்பந்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற தெளிவான செய்தியை இந்திய அரசுக்கு தெரியப்படுத்த விரும்புவதாக அந்நாட்டின் உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு அமைச்சருமான மிர்சா பக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இந்த புதிய ஒப்பந்தத்தைச் சார்ந்தே இருக்கும் என்றும் அவர் கோடிக்காட்டியுள்ளார்.
அண்மைக் காலமாக இந்தியா-பங்ளாதேஷ் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பங்ளாதேஷ் அரசியலில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களைத் தொடர்ந்து, இந்தியாவுடனான உறவில் அந்நாடு புதிய நிலைப்பாட்டை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கங்கை நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் இருதரப்புக்கும் இடையே இன்னும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே கங்கை நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய இந்தியப் பிரதமர் தேவகவுடா, பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் முன்னிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தம் நடப்பாண்டுடன் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து, நீண்ட கால அடிப்படையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள பங்ளாதேஷ் விரும்புகிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்ளாதேஷ் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களும் இந்தியாவுடனான அந்நாட்டின் உறவுகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
நதிநீர் ஒப்பந்தப் புதுப்பித்தலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, எதிர்கால நதிநீர்ப் பகிர்வு குறித்த கவலைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தற்போதைய ஒப்பந்தமே அமலில் இருக்க வேண்டும் என அமைச்சர் மிர்சா பக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் வலியுறுத்தியுள்ளார்.
“அண்டை நாடுகளுக்கு இடையே எதிர்காலத்தில் ஏற்படும் நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தங்கள் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது. பங்ளாதேஷின் 17 கோடி மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் தங்களின் வாழ்வாதாரம், பல்லுயிர்க் பெருக்கம், பல கிளை நதிகளுக்கான நீர் விநியோகத்துக்கு கங்கை நதிநீரையே நம்பியுள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

