இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளைச் சந்தித்தபின் உத்தியை மாற்றி இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கி அழித்ததாக அந்நாட்டு முப்படைத் தலைமை தளபதி அனில் சவுகான் கூறியிருந்தார்.
சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான ஷங்கிரிலா மாநாட்டில் கலந்துகொண்ட அவர், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் அதனைத் தெரிவித்தார்.
தளபதியின் அந்தப் பேச்சை சுட்டிக்காட்டி ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது போர் விமானங்களை இந்தியா இழந்ததை முதல்முறையாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமது ‘எக்ஸ்’ தளப் பதிவில் கூறினார்.
மேலும், மோடி அரசு நாட்டைத் தவறாக வழிநடத்துவதாகவும் போர் நடவடிக்கைகள் குறித்து நிபுணர் குழு ஆய்வுசெய்து அறிக்கை தர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
கார்கில் போருக்குபின் மேற்கொண்டதைப் போல, சுதந்திரமான நிபுணர் குழுவினால், போர் நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் அவர் அதில் குறிப்பிட்டார்.
“அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் இந்தியா, பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக்கொண்டு வந்ததாக மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறார். இது சிம்லா ஒப்பந்தத்திற்கு நேர் எதிரானது. அதுதவிர, அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் வரியை வைத்து மிரட்டி இந்தியா, பாகிஸ்தானை பணிய வைத்ததாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார். இவை அனைத்திற்கும் மோடி விளக்கமளிக்க வேண்டும்,” என கார்கே பதிவிட்டார்.

