சத்ரபதி சம்பாஜிநகர்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இப்போதைக்கு அரசியலில் ஈடுபடாது என்றும் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஓர் அழுத்தக் குழுவாக மட்டுமே செயல்படும் என்றும் அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற கட்சியின் முக்கியத் தலைவர்களின் கூட்டத்திற்கு முன்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “இந்தியாவிற்கு இப்போது ஒரு புதிய அரசியல் கட்சியைவிட வலுவாக அழுத்தம் தரும் குழுவே தேவைப்படுகிறது. எனவே, சிஜேபி தற்போதைக்கு மக்கள் பிரச்சினைகளில் அழுத்தம் தரும் குழுவாக மட்டுமே இயங்கும்,” என்று அவர் உறுதிபடக் கூறினார்.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர்ந்து தங்களது அமைப்பின் வழிகாட்டியாகச் செயல்படுவார் என்றும் முக்கிய விவகாரங்களில் அவரது ஆலோசனைகள் பெறப்படும் என்றும் கட்சியின் முதன்மைச் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.
அண்மையில் ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு தொடர்பாக சிஜேபி நடத்திய போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள்மீது காவல்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவுசெய்தது. அவற்றை மீட்டுக்கொள்வது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் திரு தாஸ் கூறினார்.
மேலும், நாடு தழுவிய போராட்டங்களின்போது காயமடைந்த மாணவர்களுக்குத் தேவையான சட்ட, மருத்துவ உதவிகளையும் சிஜேபி வழங்கி வருகிறது.
அர்சாங்க அமைப்புகள் மீதான பொதுநம்பிக்கை குறைந்துவருதல், எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாடு, அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டவை குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து கடந்த ஜூன் மாதம் இந்தியா திரும்பிய திப்கே, ‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்தார். டெல்லியில் திரண்ட இளைஞர்கள் தேர்வுமுறைச் சீர்திருத்தத்தையும் மத்திய கல்வி அமைச்சரின் பதவி விலகலையும் வலியுறுத்தினர்.
‘ஜென் ஸி’ தலைமுறையினரிடையே தீவிரமடைந்த இப்போராட்டம் சில இடங்களில் வன்முறையாக மாறியதை அடுத்து, டெல்லி, மும்பை, கோல்கத்தா மற்றும் பீகாரில் போராடிய மாணவர்கள்மீது காவல்துறை வழக்கு பதிந்தது.


