புதுடெல்லி: குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே, எல்லைப் பாதுகாப்புப் படை, கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற பின்பு முதல்முறையாக கட்ச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை மோடி கொண்டாடினார்.
கொண்டாட்டத்தின்போது திரு மோடி ராணுவ வீரர்கள் முன் உரையாற்றினார்.
“தற்போதைய இந்திய அரசு, நாட்டின் எல்லைகளில் உள்ள இடத்தை விட்டுக்கொடுக்காது. ஓர் அங்குல இடமானாலும் அதில் சமரசம் இருக்காது,” என்று மோடி கூறினார்.
“இந்திய மக்கள், ராணுவ வீரர்களால்தான் தேசம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். ராணுவ வீரர்கள்தான் இந்தியாவின் வலிமை,” என்று அவர் குறிப்பிட்டார்.
“கடந்த காலங்களில் அரசதந்திரம் என்ற பெயரில் இந்திய எல்லையில் உள்ள சர் க்ரீக் பகுதியை ஆக்கிரமிக்க எதிரிகளால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நான், அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தேன். நாட்டைப் பாதுகாப்பதில் ராணுவத்தின் திறன்மீது அரசுக்கு நம்பிக்கை உள்ளது,” என்று மோடி தெரிவித்தார்.
“ராணுவம், கடற்படை, விமானப்படை என வெவ்வேறு பிரிவுகளாக இருந்தாலும், அவையனைத்தும் ஒன்றிணையும்போது அவற்றின் வலிமை பன்மடங்கு அதிகரிக்கும். இதை நோக்கியே பாதுகாப்புப் படைத் தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது,” என்றார் அவர்.
குஜராத் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீரர்களின் சாகசங்களைக் கண்டு ரசித்தார்.