புதுடெல்லி: எந்த நாடும் தரும் நெருக்குதலுக்கு அடிமையாகி இந்தியா முடிவெடுப்பதில்லை என்று இந்திய தொழில்துறைச் சம்மேளனத்தின் (சிஐஐ) தலைவர் ராஜிவ் மெமானி கூறியுள்ளார்.
என்றுமே புதுடெல்லியின் அக்கறைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியா, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளும் விளிம்பில் இருக்கும் வேளையில் அவர் அவ்வாறு சொன்னார்.
“இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும் என்று தொழில்துறை விரும்புகிறது. ஆனால், இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்குச் சாதகமானதாக இருக்கவேண்டும் என்பது முக்கியம். எந்த நாடு தரும் நெருக்குதலுக்கும் அடிமையாகி இந்திய அரசாங்கம் முடிவெடுக்காது,” என்று என்டிடிவி ஊடகத்துடன் நடந்த நேர்காணலில் திரு மெமானி கூறினார்.
அமெரிக்கா, அதன் வர்த்தகப் பங்காளி நாடுகள் மீது கூடுதல் வரிவிதிப்பை இம்மாதம் ஒன்பதாம் தேதி வரை ஒத்திவைத்தது. அந்தக் கெடு நெருங்கும் வேளையில் திரு மெமானி இவ்வாறு கூறியுள்ளார்.
கூடுதல் வரிவிதிப்பின்கீழ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மீது 26 விழுக்காடு வரிவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
“இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டால் அது ஊழியர்கள் அதிகம் தேவைப்படும் துணி, ஆடை போன்ற துறைகளில் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் கணித்துள்ளோம்,” என்று திரு மெமானி தெரிவித்தார். வாகனப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள் போன்ற துறைகளும் பலனடையும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
பொருள், சேவை வரிக் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சில அத்தியாவசியப் பொருள்களுக்கான பொருள், சேவை வரி குறைக்கப்படவேண்டிய நிலை ஏற்படலாம். பற்பசை, சவர்க்காரம், சில உணவு வகைகள் ஆகியவற்றுக்குக் (வரி) குறைக்கப்படவேண்டும். சிமென்ட், சொகுசுப் பொருள் அல்ல. கட்டுப்படியான விலையில் வீடமைப்பு, கட்டுமானம் ஆகியவற்றை ஊக்குவிப்பது மிகவும் முக்கியமாகும்,” என்று திரு மெமானி கூறினார்.

