டெல்லி: இந்தியா தற்காப்பு கருவிகளை தயாரிப்பதிலும் அதை ஏற்றுமதி செய்வதிலும் இனி அதிக கவனம் செலுத்தும் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆகப் பெரிய விமானக் கண்காட்சி பெங்களூரில் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) தொடங்கியது. அப்போது இதுகுறித்து ராஜ்நாத் சிங் பேசினார்.
ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியா, எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தனது ராணுவத்தை நவீனமாகவும் அதே நேரம் உள்ளூரில் ஆயுதங்களை தயாரிக்கவும் எண்ணம் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு போட்டியாகத் திகழும் சீனா அதன் ராணுவ பலத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் தெற்கு ஆசியாவிலும் அதன் செல்வாக்கை வலுப்படுத்தி வருகிறது. அதனால் தற்போது இந்தியா நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
இவ்வாண்டுக்கான நிதியாண்டில் மட்டும் இந்தியாவின் உள்நாட்டு ஆயுத தயாரிப்பின் மதிப்பு 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் ஆயுத ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவில் 2.3 பில்லியன் டாலருக்கு செய்யப்பட்டுள்ளது என்றும் ராஜ்நாத் தெரிவித்தார்.
இனிவரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.