மேற்கு வங்காளம்: மேற்கு வங்கம் மருத்துவச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1.1 லட்சம் மருத்துவர்களின் கல்விச் சான்றிதழ்களை அம்மாநில அரசாங்கம் சரிபார்க்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் பலர் போலிச் சான்றிதழ்களைக் கொண்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் 1996ஆம் ஆண்டிலிருந்து பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என்று மாநிலச் சுகாதார அமைச்சர் ஷராவாட் முகர்ஜி கூறினார்.
“மிகப் பெரிய அளவிலான போலி மருத்துவர்கள் எங்கள் பதிவேட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தகைய தனிநபர்களின் தகுதிகளை மறுஆய்வு செய்யவிருக்கிறோம். பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து மருத்துவர்கள் பெற்ற 1.1 லட்சம் சான்றிதழ்கள் புதிய சரிபார்க்கும் முறைக்கு உட்படுத்தப்படும்,” என்றார் முகர்ஜி.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குரிய மருத்துவப் பதிவுகளைச் சரிபார்க்க வேண்டியிருப்பதால், மேற்கு வங்க மாநிலம் புதிய சரிபார்க்கும் நடைமுறையை அறிமுகம் செய்யும் என்றார் அவர்.
மருத்துவர்கள் தேவையில்லாத சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்க, வெளிப்புற அமைப்பு அந்த நடைமுறையைக் கையாளும் என்றும் முகர்ஜி சொன்னார்.
‘நோவ் யோர் டாக்டர்’ (know your doctor) என்ற நடைமுறையை அறிமுகம் செய்வதாகக் கூறிய அவர், நேரடியாகவும் காணொளி மூலமாகவும் மருத்துவர்களின் தகுதிகள் சரிபார்க்கப்படும் என்றார்.
“உரிய ஆவணங்கள் அனைத்தும் சேகரிக்கப்படும்,” என்று முகர்ஜி உறுதி கூறினார்.
அதுகுறித்து அதிகாரபூர்வத் தகவல் மருத்துவர்களுக்கு வழங்கப்படும்.
