புதுடெல்லி: இந்தியாவில் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னேப்சேட் போன்ற குறுந்தகவல் அனுப்புவதற்கான தளங்கள் செயல்பட அவை பதிவிறக்கம் செய்யப்படும் திறன்பேசிகளில் சிம் அட்டை இருக்கவேண்டும் என்ற விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையைப் பூர்த்திசெய்ய சம்பந்தப்பட்ட தளங்களுக்கு இந்தியாவின் தொலைத்தொடர்புப் பிரிவு 90-நாள் கெடு தந்துள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. புதிய விதிமுறையின்படி, வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் பதிவுசெய்யப்பட்டுள்ள சிம் அட்டை திறன்பேசியிலிருந்து அகற்றப்பட்டால் அவை செயல்படாமல் போகவேண்டும்.
கெடு கருத்தில்கொள்ளப்பட்ட பிறகு புதிய விதிமுறை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடப்புக்கு வரும். புதிய விதிமுறையின்படி இணையம்வழி பயன்படுத்தப்படும்போதும் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தளங்களிலிருந்து பயனர்கள் ஆறு மணிநேர இடைவெளியில் ‘வெளியே அனுப்பப்படுவர்’ (logged out). பிறகு அவர்கள் கியூஆர் குறியீட்டைக் கொண்டு மீண்டும் இணையம்வழி இத்தளங்களுக்குள் நுழையவேண்டும்.
சிம் அட்டைகள் அகற்றப்பட்டு அல்லது செயலிழக்கப்பட்ட பிறகும் இணைய மோசடிக்காரர்கள் இந்தக் குறுந்தகவல் தளங்களைப் பயன்படுத்தாமல் இருக்க இந்நடவடிக்கை அவசியம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். வெளிநாடுகளில் செயல்படும் மோசடிக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தி மோசடிச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது அரசாங்கத்தின் கருத்து.

