புதுடெல்லி: இந்தியாவில் கோதுமை விளைச்சல் இரண்டு விழுக்காடு அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு கணித்துள்ளது.
கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் 117.94 மில்லியன் டன்னாக இருந்தது என்றும் நடப்பாண்டில் அதன் விளைச்சல் அளவானது 120.21 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் இந்திய வேளாண் அமைச்சு முன்னுரைத்துள்ளது.
இந்தியாவில் கோடைக் காலத்தையொட்டி, கோதுமை அறுவடை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. கோதுமை அதிகம் விளையும் மாநிலங்களில் அந்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சு விளைச்சல் மதிப்பீடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு முக்கியத் தரவுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு இளவேனிற்காலப் பயிர்கள் எனப்படும் ‘ராபி’ பயிர்களின் மொத்த விளைச்சல் 169.16 மில்லியன் டன்னாக இருந்தது.
தற்போது அந்தப் பயிர்களின் மொத்த விளைச்சல் 3.16 விழுக்காடு அதிகரித்து, 174.51 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருப்பு வகைகளின் விளைச்சல் அளவு 15.23 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் அதன் விளைச்சல் ஏழு விழுக்காடு அதிகரித்து, 16.24 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து வகைத் தேவைகளுக்காகவும் இறக்குமதியைச் சார்ந்திருக்காமல், உள்நாட்டின் தேவைக்கேற்ப விளைச்சல் அதிகரிக்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே கடந்த ஆண்டில் 11.11 டன்னாக இருந்த பட்டாணி விளைச்சல், நடப்பாண்டில் சற்றே அதிகரித்து 11.79 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் தானியங்கள் விளைச்சல் 1.65 மில்லியன் டன்னிலிருந்து 1.73 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்றும் வேளாண் அமைச்சு வெளியிட்ட விளைச்சல் மதிப்பீட்டறிக்கை தெரிவிக்கிறது.
இதேபோன்று சோளத்தின் விளைச்சல் 14.75 டன்னிலிருந்து இந்த ஆண்டு 15.90 டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நாடு முழுவதும் உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றின் விளைச்சல் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் 553,000 டன் உளுந்து விளைந்தது.
இந்நிலையில், உளுந்து விளைச்சல் 508,000 டன்னாகக் குறையும் என்றும் பச்சைப்பயறு விளைச்சல் 100,000 டன்னில் இருந்து 87,000 டன்னாகக் குறையும் என்றும் வேளாண் அமைச்சின் விளைச்சல் மதிப்பீட்டறிக்கை தெரிவிக்கிறது.

