தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்: பிரதமர் மோடி விளக்கம்

2 mins read
a997df65-04af-48b3-a9cd-95ace57cd2c5
ஒடிசா மாநிலத்தில் உள்ளது பூரி ஜெகநாதர் கோவில். ஆன்மிகத்தில் நாட்டமுள்ள பிரதமர் மோடி, ஜெகநாதர் மீது மிகுந்த பக்திகொண்டவர். - படம்: ஊடகம்

புவனேஸ்வர்: கடவுள் ஜெகநாதரின் மண்ணுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்பை தாம் ஏற்கவில்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஜி7 உச்சநிலை மாநாட்டுக்காக, கனடா சென்ற அவர், அங்கு உலகத் தலைவர்கள் பலரைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது கனடாவில் இருந்து நாடுதிரும்பும் வழியில், அமெரிக்காவுக்கு வருகை தருமாறு, இந்தியப் பிரதமர் மோடிக்கு, அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

ஆனால், முன்கூட்டியே திட்டமிட்டு உறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, தம்மால் அமெரிக்காவுக்கு வர இயலாது என்று பிரதமர் மோடி கூறியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், தாம் ஏன் அமெரிக்கா செல்லவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் பிரதமர் மோடி.

ஒடிசா மாநிலத்தில் உள்ளது பூரி ஜெகநாதர் கோவில். ஆன்மிகத்தில் நாட்டமுள்ள பிரதமர் மோடி, ஜெகநாதர் மீது மிகுந்த பக்திகொண்டவர்.

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். அப்போது, அவர் அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏன் ஏற்கவில்லை என்பதற்கான காரணத்தைக் குறப்பிட்டார்.

“விருந்துடன் கூடிய பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அவரிடம் அழைப்புக்கு நன்றி தெரிவித்தேன். எனினும், புனிதமான ஜெகநாதரின் மண்ணுக்கு வர வேண்டும் என்ற காரணத்திற்காக அந்த அழைப்பைப் பணிவாக மறுத்தேன். உங்களின் அன்பும் ஜெகநாதர் மீதான பக்தியுமே என்னை இந்த மண்ணிற்கு வரவழைத்தது,” என்றார் மோடி.

பாஜக ஆட்சி அமைந்ததும், பூரி ஜெகநாதர் கோவிலின் நான்கு வாயில் கதவுகளும் பொக்கிஷ அறையும் திறக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இது கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மரியாதை அளித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார். மேலும், இதில் எத்தரப்புக்கும் அரசியல் வெற்றியோ தோல்வியோ கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒடிசா மாநிலம் இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தைத் தாங்கி நிற்கிறது என்றும் பாரம்பரியம் என்பது இந்தியா வளர்ச்சியின் அடிப்படையாக அமைந்துள்ளது என்றும் மோடி கூறினார்.

குறிப்புச் சொற்கள்