ரயில் பாதையில் பிரசவித்த காட்டு யானை

1 mins read
2 மணி நேரத்துக்குமேல் நிறுத்திவைக்கப்பட்ட ரயில்
d3c67987-a294-436d-afba-fd000badb955
பிரசவத்துக்குப்பின் யானை அதன் கன்றுடன் அமைதியாகக் காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. - படங்கள்: X/@byadavbjp

புதுடெல்லி: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் பாதையில் காட்டு யானை ஒன்று பிரசவிக்க நேர்ந்தது.

யானை பாதுகாப்பாகப் பிரசவிக்க உதவும் பொருட்டு, அந்தப் பாதையில் செல்லவேண்டிய ரயில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

யானை ரயில் பாதையில் பிரசவித்த அரிய சம்பவம் காணொளியாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் அதைப் பதிவிட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், மனிதர்களும் வனவிலங்குகளும் நல்லிணக்கத்துடன் இணைந்து வாழும் சாத்தியத்திற்கு இச்சம்பவம் சான்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியில், கன்றை ஈன்ற பிறகு அதனுடன் யானை அமைதியாகக் காட்டுக்குள் சென்றதும் பதிவாகியிருப்பதாக அவர் கூறினார்.

பல்வேறு அரசாங்க அமைப்புகள் இணைந்து வனவிலங்குப் பாதுகாப்பு தொடர்பில் கூட்டு முயற்சிகள் மேற்கொள்வதாகக் கூறிய அவர் தமது அமைச்சும் இந்திய ரயில்வே துறையும் இணைந்து நாடு முழுவதும் அமைந்துள்ள 3,500 கிலோமீட்டர் நீள ரயில் பாதைகளை ஆய்வு செய்து அவற்றில் வனவிலங்கு நடமாட்டம் காணப்படும் 110 இடங்களை அடையாளம் கண்டதாகக் குறிப்பிட்டார்.

அந்த இடங்களை அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணித்து, விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுப்பதாக அமைச்சர் கூறினார்.

ஜார்க்கண்ட் வனவிலங்கு அதிகாரிகளின் செயல்திறனால் அந்தக் காட்டு யானை நலமுடன் பிரசவித்தது குறித்து அவர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்