மும்பை: ஓடுபாதையில் இரு விமானங்கள் லேசாக உரசிக்கொண்ட விபத்து காரணமாக மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
இச்சம்பவத்தின்போது கோவைக்குப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானமும் ஹைதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய இண்டிகோ விமானமும் ஒன்றோடு ஒன்று உரசிக்கெண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இரு விமானங்களின் இறக்கைகள் உரசிக்கொண்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
விபத்தின்போது ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக, அது நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது, ஏற்கெனவே அதே ஓடுபாதையில் மெதுவாக வந்து கொண்டிருந்த விமானத்தின் இறக்கைகள் மீது லேசாக உரசியது. அப்போது இரு விமானங்களிலும் பயணிகள் இருந்தனர். கடும் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக இரு விமானங்களில் இருந்தும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் அறிக்கைகள் வெளியிட்டு உறுதி செய்துள்ளன.
ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை சேதமடைந்துள்ளது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

