நாமக்கல்: ரூபாய் ஆறு லட்சத்துக்குத் தனது சிறுநீரகத்தை விற்றுவிட்டதாக பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் அருகே அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆனந்தன், 45 சிறுநீரக விற்பனைத் தரகராகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இவர், அப்பகுதியை சேர்ந்த கவுசல்யா, விஜயா ஆகிய பெண் தொழிலாளர்களிடம் ஆசை வார்த்தைகைள் கூறி, சிறுநீரகத்தை விற்பனை செய்ய வைத்துள்ளார்.
இந்நிலையில் சென்னை சுகாதாரத்துறை சட்டப்பிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான, நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ராஜ்மோகன் மற்றும் மருத்துவக்குழுவினர் ஜூலை 17ஆம் தேதி அன்னை சத்யா நகர் குடியிருப்பில் விசாரணை நடத்தினர்.
அங்கு, சிறுநீரகத்தை விற்ற கவுசல்யாவை பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இது குறித்து பேசிய நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ராஜ்மோகன், கவுசல்யாவிடம் நடத்திய விசாரணையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை நடந்ததாகத் தெரிகிறது என்றார்.
“சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று, அறுவை சிகிச்சை செய்தவர்களின் பட்டியல் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. அதில், குறிப்பாக ஆறு பேரின் ஆவணங்களை வாங்கி சரிபார்த்தோம். அவை அனைத்தும், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், அன்னை சத்யாநகர், ஆவாரங்காடு பகுதிகளை சேர்ந்த முகவரியாக இருந்தது. இந்த முகவரியில் நேரில் சென்று விசாரணை செய்தபோது, ஐந்து முகவரியும் போலி என்பது தெரிந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதில், கவுசல்யா, 6 லட்சம் ரூபாய்க்கு தனது ஒரு சிறுநீரகத்தை, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலம், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டு உள்ளது. முழு தகவல்களையும் வெளியில் சொல்ல முடியாது. மற்றொரு பெண் விஜயா, குமாரபாளையத்தில் உள்ளார். அவரிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை என்று மேலும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே சிறுநீரக விற்பனைத் தரகர் ஆனந்தன் தலையில் தொப்பி அணிந்துகொண்டு ஸ்கூட்டரில் அன்னை சத்யாநகர் பகுதிக்கு வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த பள்ளிப்பாளையம் காவல்துறையினர் அங்கு சென்றனர். ஆனால் காவல்துறையினர் வருவதை அறிந்து அங்கிருந்து ஆனந்தன் தப்பித்துவிட்டார்.
அவரை பிடிக்க சனிக்கிழமை அன்று திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன், பள்ளிப்பாளையம் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில், இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப் படை காவல் துறையினர் பள்ளிப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரைத் தேடி வருகின்றனர்.
அப்பாவி தொழிலாளர்களை குறிவைத்து தரகர்கள் மூளைச்சலவை செய்து சிறுநீரகத்தை விற்பனை செய்ய வைத்துள்ளனர்.