தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தன் தங்கையை மணமுடிக்க மறுத்த மைத்துனரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்

2 mins read
9c7964c8-8e2b-40f9-8c32-71d2b7746edb
தாக்குதலுக்கு ஆளான ஆடவர்க்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கவிருந்தது. - மாதிரிப்படம்

ஆக்ரா: தன் தங்கையை மணமுடிக்க தன் கணவரின் தம்பி மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண், அவரது பிறப்புறுப்பை வெட்டிய அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம், பர்ஹான் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். பொறியாளரான அவர், ஹல்துவானியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தீபாவளி விடுமுறைக்காக அவர் தமது வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அவருடைய மூத்த சகோதரர் ராஜ் பகதூர், அர்ச்சனா என்ற பெண்ணை மணமுடித்துள்ளார்.

இந்நிலையில், அர்ச்சனா தன் தங்கையைத் தன் மைத்துனர் யோகேஷுக்கு மணமுடித்து வைக்க விரும்பினார். ஆனால், யோகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் உறுதிசெய்யப்பட்டு, வரும் நவம்பர் மாதம் அவர்களது திருமணத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சனா, யோகேஷின் திருமணத்தை நிறுத்தத் திட்டமிட்டதாகச் சொல்லப்படுகிறது.

திங்கட்கிழமை (அக்டோபர் 20) தீபாவளி வழிபாடு செய்வதற்காகத் தம் அறைக்கு வரும்படி மைத்துனர் யோகேஷை அவர் அழைத்தார். அறைக்குள் யோகேஷ் வந்ததும் கூரிய ஆயுதத்தால் அவரது பிறப்புறுப்பை அர்ச்சனா வெட்டியதாகக் கூறப்படுகிறது.

யோகேஷின் அலறல் கேட்டு ஓடிவந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள், அவரது உடலிலிருந்து ரத்தம் கொட்டியதைக் கண்டனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவத்திற்குப் பின் ராஜ் பகதூர் தம் மனைவி அர்ச்சனாவை தங்கள் மூன்று குழந்தைகளுடன் அவரின் பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

காவல்துறை ராஜ் பகதூரிடமும் அர்ச்சனாவிடமும் விசாரணை நடத்தியது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை இன்னும் வழக்கு பதியவில்லை எனக் கூறப்பட்டது. எல்லாக் கோணங்களிலும் விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்