கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் நடைபெற்ற பாரம்பரிய ‘தடியடி திருவிழா’வின்போது ஏற்பட்ட மோதலில் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆலூர் இந்திரா நகரைச் சேர்ந்த போத்து ராஜு (32) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
இரு மலைவாழ் கிராம மக்கள் ஆண்டுதோறும் இரவில் ஓரிடத்தில் கூடி, பின்னர் இரு பிரிவுகளாகப் பிரிந்து இவ்விழாவை நடத்துவர். மலைமீதுள்ள அம்மன் சிலையைத் தங்கள் கிராமத்தில் கொண்டுவந்து வைக்க இரு தரப்பும் போட்டியிடும்.
அம்மன் சிலையை யார் கொண்டுவந்து தங்கள் கிராமத்தில் வைக்கிறார்களோ, அவர்களின் ஊரில்தான் அடுத்த ஆண்டு வரை அம்மன் சிலை இருக்கும்.
சிலையை மற்றொரு கிராமத்துக்குக் கொண்டு செல்வதைத் தடுக்க கம்பு, கற்களால் தாக்கிக்கொள்வர். விடிய விடிய நடைபெறும் இந்தத் திருவிழாவில் பெரியவர், சிறியவர், ஆண், பெண் என எந்த வேறுபாடுமின்றி அனைவரும் கலந்துகொள்வர்.
காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கர்னூல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆண்டாண்டு காலமாகப் பக்தி உணர்வோடு நடத்தப்பட்டு வரும் இந்தப் பாரம்பரிய விழாவில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் ஒவ்வோர் ஆண்டும் பக்தர்கள் காயமடைவது தொடர்கதையாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
