ஆட்டோ ஓட்டுநரைச் செருப்பால் அடித்த பெண்

2 mins read
பின்னர் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்
a0c28c0f-7279-4837-bcb1-c9316b42f4b1
சனிக்கிழமை (மே 31), தன் கணவருடன் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த பங்குரி மிஷ்ரா, ஆட்டோ ஓட்டுநர் லோகேஷைச் செருப்பால் அடித்த காணொளி இணையத்தில் பரவியது. ஞாயிற்றுக்கிழமை பங்குரி கைது செய்யப்பட்டார். - படங்கள்: என்டிடிவி

பெங்களூரு: பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநரைச் செருப்பால் அடித்ததாகக் கூறப்படும் பெண்ணை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) காவல்துறை கைது செய்துள்ளது. தற்போது அவர் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பங்குரி மிஷ்ரா எனும் அந்தப் பெண், சனிக்கிழமை, ஆட்டோ ஓட்டுநர் லோகேஷைச் செருப்பால் அடித்ததாகத் தெரிகிறது. அச்சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவியது.

கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது லோகேஷ் ஓட்டிய ஆட்டோ தன் காலில் ஏறியதாகப் பங்குரி கூறுகிறார். ஆனால் லோகேஷ் அதை மறுக்கிறார்.

வாக்குவாதத்துக்கிடையே லோகேஷ் அச்சம்பவத்தைக் காணொளியாகப் பதிவுசெய்ய முயன்றபோது பங்குரி அவரைத் தாக்கத் தொடங்கினார்.

இந்தி மொழியில், “காணொளி எடுக்கிறாயா? எடுத்துக்கொள்,” என்று கூறியவாறே பங்குரி லோகேஷை மீண்டும் மீண்டும் தாக்குவது காணொளியில் பதிவாகியுள்ளது.

பின்னர் யாரிடமோ கைப்பேசியில் பங்குரி பேசுவதை அக்காணொளி காட்டுகிறது.

பங்குரி உள்ளூர் மொழியான கன்னடத்தில் பேசாமல் இந்தியில் பேசியதால் தான் காணொளியாகப் பதிவுசெய்யத் தொடங்கியதாகக் கூறினார் லோகேஷ்.

சம்பவத்துக்குப் பிறகு, பங்குரியும் அவர் கணவரும் ஆட்டோ ஓட்டுநரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி மற்றொரு காணொளியில் பதிவாகியுள்ளது.

“மன்னிப்பு கோருகிறேன். நான் கர்ப்பமாக உள்ளேன். அதனால், ஒருவேளை கரு கலைந்துவிடுமோ என்று அஞ்சினேன்,” என்று லோகேஷிடம் அவர் கூறினார்.

பங்குரி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.

தனக்குக் கன்னட மக்கள் மீது வெறுப்பு இல்லை என்றும் பெங்களூரு நகர், அதன் மக்கள், கலாசாரத்தின் மீது தனக்கும் தன் கணவருக்கும் அன்பு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்